வடகால், தென்கால் பாசனத்துக்குஸ்ரீவைகுண்டம்தடுப்பணையில்தண்ணீர் திறக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை


தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:45 PM GMT)

வடகால், தென்கால் பாசனத்துக்கு ஸ்ரீவைகுண்டம்தடுப்பணையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து உடனடியாக வடகால், தென்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் அடிப்படை பிரச்சினைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நம்பாராஜன், விவசாயிகள் சங்க ஏரல் தாலுகா செயலாளர் சுப்புத்துரை, மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், அணைகளில் இருந்து

இனி குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். பாசனத்துக்கு தண்ணீர் திறக்க மாட்டோம். அனைத்து பாசன கால்வாய்களையும் உயர் அதிகாரிகள் அடைக்க சொல்லிவிட்டதாக விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்தார்.

தண்ணீர் திறக்க வேண்டும்

அதேநேரத்தில் மருதூர் அணையில் இருந்து குறிபிட்ட பகுதிக்கு மட்டும் உதவி செயற்பொறியாளர் தண்ணீர் திறந்துவிட்டு உள்ளார். விவசாயிகளை திசைதிருப்பி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் தண்ணீர் திறந்த செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் 7 அடி தண்ணீர் சேமித்து, வடகால், தென்கால் பகுதி விவசாயத்துக்கு கடைமடை வரை உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் நிர்வாகிகள் கொடுத் த மனுவில், கயத்தாறு தாலுகா அகிலாண்டபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரியால் விவசாயம் அழிந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே இந்த கல்குவாரியை உடனடியாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

திருச்செந்தூர் அருகே உள்ள மேலக்கானம், புதுமனை கிராமத்தில் வசிக்கும் மக்கள் கொடுத்த மனுவில், புதுமனையில் 50 குடும்பங்கள் பல தலைமுறையாக வசித்து வருகிறோம். வனத்துறைக்கு சொந்தமானதாக நிலம் 21.11.1957-ல் எங்களுக்கு குடியிருப்பதற்காக வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி எங்கள் வீடுகளின் கதவுகளில் வனத்துறை சார்பில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் நாங்கள் இருக்கும் இடம் ஆக்கிரமிப்பு என்றும், நாங்கள் சட்டவிரோதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு வேறு வாழ்விடம் கிடையாது. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு நாங்கள் இருக்கும் இடத்தில் நிரந்தரமாக குடியிருக்க ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளியை தரம் உயர்த்துக

திருச்செந்தூர் அருகே உள்ள கீழ மாதவன்குறிச்சி பகுதியை சேர்ந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், மாதவன்குறிச்சி பகுதியில் சுமார் 50 பேருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது ராக்கெட் ஏவுதள பணிக்காக இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்துவிட்டார்கள், எனவே, எங்களுக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராக்கம்மாள் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், பல்லாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 109 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் மேற்படிப்புக்கு கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி சென்று தான் படிக்க வேண்டும். எனவே, பல்லாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story