வடமாநில இரும்பு கடை உரிமையாளர் குத்திக்கொலை


பெரம்பலூரில் வடமாநில இரும்பு கடை உரிமையாளர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு அவரது உடல் மோட்டார் சைக்கிளுடன் கட்டி கிணற்றில் வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

இரும்பு கடை உரிமையாளர்

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மல்லிகை நகரில் வசித்து வரும் ஜெகராமின் மகன் பரத்குமார் என்ற பகடுராம் (வயது 35). ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வடக்கு மாதவி ரோட்டில் சொந்தமாக இரும்பு கடை வைத்து நடத்தி வந்தார்.

கடந்த 6-ந்தேதி இரவு கடையில் இருந்த பகடுராம் ஊழியர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான பகடுராமை தேடி வந்தனர்.

கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனை

இந்த நிலையில் சந்தேகப்படும்படியாக அவரது செல்போனில் ஜி பே மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பகடுராமை யாரேனும் பணத்துக்காக கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பகடுராமின் செல்போனில் ஜி பே மூலம் அரியலூர் மாவட்டம் மேலபழூரை சேர்ந்த சரவணனின் மகன் சஞ்சய் ரோஷன் (19) என்பவருக்கு அதிக தொகை அனுப்பப்பட்டிருந்தால், அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பணத்தை பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு ஆறுமுகத்தின் மகன் கமல் (25), திருநகரை சேர்ந்த சூரியின் மகன் கார்த்தி (27) ஆகியோர் வேறோருவரின் ஜி பே மூலம் தனக்கு அனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து கமல், கார்த்தியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் பகடுராமை கொலை செய்து உடலை மோட்டார் சைக்கிளுடன் கட்டி பெரம்பலூர்-எளம்பலூர் செல்லும் சாலையில் உப்போடை காட்டு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியதாக கூறினர்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து போலீசார் நேற்று மதியம் உப்போடை காட்டுப்பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றுக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மோட்டார் சைக்கிளுடன் பகடுராமின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே இதுகுறித்து தகவலறிந்த பகடுராமின் உறவினர்களும், பொதுமக்களும் அந்தப்பகுதியில் கூடினர்.

பகடுராம் கொலைக்கு காரணம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

சம்பவத்தன்று பகடுராம் மோட்டார் சைக்கிளில் எளம்பலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது உப்போடை பாலத்தில் கமல், கார்த்தி ஆகியோர் மது குடித்து கொண்டிருந்தனர்.

பீர் பாட்டிலால் குத்து...

பகடுராமின் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கின் வெளிச்சம் கமல், கார்த்தி முகத்தில் அடித்தது. இதனால் கமல், கார்த்தி ஆகியோர் பகடுராமை மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி பின்தொடர்ந்து ஓடி துரத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளை நிறுத்திய பகடுராமை 2 பேரும் சேர்ந்து தாக்கினர். இதனால் வலி தாங்க முடியாமல் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு பகடுராம் உப்போடை காட்டுப்பகுதிக்கு தப்பி ஓடினார்.

இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் கமல், கார்த்தி சென்று பகடுராமை பிடித்து அந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றின் அருகே அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் அங்கு வைத்து பகடுராமை அடித்ததில் மயக்கமடைந்தார். பின்னர் மயக்கம் தெளிந்த பகடுராமிடம் அவர்கள் ஜி பே கணக்கு எண், பாஸ்வேர்டை ஆகியவற்றை பெற்று கொண்டு தங்களது ஜி பேவுக்கு பணம் அனுப்புமாறு கூறி விட்டு, கமலின் மனைவி நித்யா (25) ரூ.10 ஆயிரத்தை அனுப்பினர். உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பி செல்வதற்காக பகடுராம் அருகே இருந்த பீர் பாட்டிலால் கமலின் வலது விரலில் குத்தினார். இதனை கண்டு ஆத்திரமடைந்த கார்த்தி அருகே உடைந்து கிடந்த பீர் பாட்டிலால் பகடுராமின் கழுத்தில் குத்தினார். இதனால் பலத்த காயமடைந்த பகடுராம் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

5 பேர் கைது

பின்னர் நடந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக கமல், கார்த்தி ஆகியோர் பகடுராமின் உடலை அவரது மோட்டார் சைக்கிளை வைத்து கட்டி அருகே உள்ள கிணற்றில் வீசினர். ஆனாலும் அவர்கள் அதன்பிறகு பகடுராமின் செல்போனில் அவரது ஜி பே கணக்கை பயன்படுத்தி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை சஞ்சய் ரோஷனுடைய ஜி பேவுக்கு அனுப்பி விட்டனர். இதையடுத்து கமல், கார்த்தி பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் 3-வது வார்டு காலனி தெருவை சேர்ந்த பெரியசாமியின் மகன் வரதன்ராஜ் (30) என்பவரிடம் அடைக்கலம் கேட்டு, அவரது அக்காள் வீட்டில் அவர்களை தங்க வைத்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கமல், கார்த்தி, நித்யா, சஞ்சய் ரோஷன், வரதன்ராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story