வடமாநில தொழிலாளி கம்பியால் அடித்துக்கொலை


வடமாநில தொழிலாளி கம்பியால் அடித்துக்கொலை
x

வடமாநில தொழிலாளி கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

திருச்சி

துறையூர்:

வடமாநில தொழிலாளர்கள்

திருச்சி மாவட்டம், துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையன்(வயது 57). இவர் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் உட்புறத்தை அழகுபடுத்துவதற்காக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியனை அணுகியுள்ளார்.

அவர், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் சர்மா (31), சோட்டு (28), சச்சின் (28) ஆகிய 3 தொழிலாளர்களை கண்ணையனின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள், கண்ணையன் வீட்டின் கீழ்ப்புறத்தில் ஒரு அறையில் தங்கியுள்ளனர்.

கம்பியால் தாக்கினர்

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கண்ணையன் தனது வீட்டின் முன்பக்க கதவை பூட்டுவதற்காக வந்துள்ளார். அப்போது தர்மேந்தர் சர்மாவை சோட்டு, சச்சின் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கண்ணையன் சத்தம் போட்டுள்ளார். இதனால் சோட்டு, சச்சின் ஆகியோர் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து மயக்க நிலையில் இருந்த தர்மேந்தர் சர்மா, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கண்ணையன் அளித்த புகாரின்பேரில் துறையூர் போலீசார், கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

இந்நிலையில் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தர்மேந்தர் சர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்த துறையூர் போலீசார், தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story