தினக்கூலி வேலைக்காக குவியும் வடமாநில தொழிலாளர்கள்


தினக்கூலி வேலைக்காக குவியும் வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவை கரும்புக்கடை பகுதியில் தினக்கூலி வேலைக்காக வட மாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் சாலையில் காத்துக் கிடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை கரும்புக்கடை பகுதியில் தினக்கூலி வேலைக்காக வட மாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் சாலையில் காத்துக் கிடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கூலி தொழிலாளர்கள்

கோவை மாநகரில் அன்றாடம் தினக்கூலி வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் ஆங்காங்கே கூட்டமாக நின்று கொண்டு ஒப்பந்ததாரர் வந்தவுடன் தங்களுக்கு ஒதுக்கிய வேலையை செய்ய பிற இடங்களுக்கு செல்வார்கள்.

குறிப்பாக கோவையில் சுந்தராபுரம், கரும்புக்கடை, துடியலூர், கணபதி மோர் மார்க்கெட் பகுதிகளில் தொழிலாளர்கள் அதிகளவில் கூட்டமாக நின்று கொண்டு இருக்கின்றனர். அதிலும் கரும்பு கடை ஜங்ஷனில் தினமும் 300-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் காலை 6 மணி முதல் 9.30 மணி வரை காத்திருப்பார்கள்.

போக்குவரத்து நெரிசல்

கரும்புக்கடை பகுதியானது ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் பகுதியாகும். அப்படிப்பட்ட இடத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலை நேரத்தில் நிற்கும்போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

காலை 8 மணி முதல் 9 மணி வரையில் கல்லூரி வாகனம் மற்றும் பள்ளி வாகனம் அதிகமாக இங்கு இயங்கி கொண்டிருக்கும். இதனால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சில நேரங்களில் இவர்கள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றித் திரியும் போது வாகன நெரிசல் மேலும் கூடுகிறது.

இடத்தை மாற்ற வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சாதாரணமாக எப்போதுமே இப்பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் உள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் கூடுவது போக்குவரத்துக்கு மிகவும் தடையாக உள்ளது.

குறிப்பாக இப்பகுதியில் நின்று கொண்டிருக்கும் தொழிலாளர்களில், 90 சதவீதம் பேர் வடமாநில தொழிலாளர்கள். வேலைக்கு அழைத்து செல்பவர்கள் அந்த இடத்தை மாற்றினால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறையும். உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருவதால் மேம்பாலத்துக்கு அடியில் நிறைய இடம் உள்ளது. அப்பகுதியில் தொழிலாளர்களை நிறுத்தினால், போக்குவரத்துக்கு தடை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story