வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை
திருவட்டார் அருகே அண்ணன் மகளை கேலியாக பேசியதால் வடமாநில தொழிலாளியை அடித்து கொலை செய்த சகதொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே அண்ணன் மகளை கேலியாக பேசியதால் வடமாநில தொழிலாளியை அடித்து கொலை செய்த சகதொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமாநில தொழிலாளர்கள்
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சோம்போ (வயது30), தொழிலாளி. இவரும் அசாமை சேர்ந்த தொழிலாளி அனில் பர்மன் (22) என்பவரும் திருவட்டார் அருகே உள்ள கீழ்சித்திரங்கோட்டில் ஒரு அலங்கார தரைகற்கள் (இண்டர்லாக்) தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். இதற்காக இருவரும் தொழிற்சாலை அருகே ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இருவரும் அறையில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அனில் பர்மனின் அண்ணன் மகளைப் பற்றி சோம்போ கேலியாக பேசியதாக கூறப்படுகிறது.
கம்பியால் அடித்துக்கொலை
இதனால், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அனில் பர்மன் கையில் வைத்திருந்த கத்தியால் சோம்போவை குத்தினார். சுதாரித்துக் கொண்ட சோம்போ அங்கிருந்து வெளியே தப்பி ஓடினார். ஆனால், அனில் பர்மன் விடாமல் துரத்தி வந்து அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து வீசினார். பாட்டில் சோம்போவின் தலையில் பட்டதால், அவர் நிலைதடுமாறி அங்கிருந்த அலங்கார தரைகற்கள் மீது விழுந்தார். உடனே, அனில்பர்மன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சோம்போவின் தலை, முகம், மார்பு போன்ற பகுதிகளில் சரமாரியாக தாக்கினார். இதில் சோம்போ முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அனில் பர்மன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
கைது
இதற்கிடைேய தொழிற்சாலைக்கு வந்த உரிமையாளர் சோபிதராஜ் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அனில்பர்மனை ேதடி வந்தனர். அப்போது, அனில்பர்மன் வலியாற்று முகத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அனில்பர்மனை கைது செய்தனர். பின்னர் அவரை பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண்ணை கேலியாக பேசியதால் வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.