வடமாநில தொழிலாளி குத்திக்கொலை
கோவை சூலூர் அருகே வேலைக்கு வர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனியார் மில் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர்
கோவை சூலூர் அருகே வேலைக்கு வர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனியார் மில் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வடமாநில தொழிலாளி
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுபாஷ் கூம்பிகர் (வயது 40). இவர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் குடும்பத்துடன் தங்கியிருந்து மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். சுபாஷ் கூம்பிகர் தம்பியான சுரைன் கூம்பிகரும் அவருடன் தங்கியிருந்து அதே மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சுபாஷ் கூம்பிகர் வேலை முடிந்து தனது அறைக்கு வந்து குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தனியார் மில்லின் மேலாளரான கண்ணம்பாளையத்தை சேர்ந்த மார்ட்டின் என்ற பிராங்கிளின் (வயது 36) மற்றும் சூப்பர்வைசர் ஆகியோர் வந்து சுபாஷ் கூம்பிகரையும், சுரைன் கூம்பிகரையும் இரவு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
கத்தியால் குத்திக்கொலை
ஆனால், சுபாஷ் கூம்பிகர் தாங்கள் தற்போது தான் பணி முடிந்து வந்துள்ளோம். அதனால் இரவு பணிக்கு வரமுடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மேலாளர் மார்டினுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த மார்ட்டின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷ் கூம்பிகரையும், சுரைன் கூம்பிகரையும் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சூப்பர்வைசர் சூர்யா உடனடியாக மில் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக படுகாயம் அடைந்த சுபாஷ் கூம்பிகரையும், சுரைன் கூம்பிகரையும் மீட்டு, மில் வாகனத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சுபாஷ் கூம்பிகர் பரிதாபமாக இறந்து விட்டதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த சுரைன் கூம்பிகருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலாளர் கைது
இந்த சம்பவம் குறித்து சுரைன் கூம்பிகர் கொடுத்த புகாரின் பேரில், சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்து, தனியார் மில் மேலாளர் மார்ட்டினை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு வர மறுத்ததால் வடமாநில தொழிலாளியை தனியார் மில் மேலாளர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.