கள்ளத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில வாலிபர் கைது
தமிழக-கர்நாடகா எல்லையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
கூடலூர்
தமிழக-கர்நாடகா எல்லையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
துப்பாக்கி பறிமுதல்
நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து போதை, வெடி மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வருவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழக-கர்நாடக எல்லையான கக்கனல்லாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மராட்டிய மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் கக்கனல்லா சோதனைச்சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்துக்குள் வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தினர். பின்னர் காரில் சோதனை செய்த போது, உள்ளே துப்பாக்கி, ஒரு தோட்டா இருப்பது தெரியவந்தது. உடனே துப்பாக்கி, தோட்டாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடமாநில வாலிபர் கைது
இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த வடமாநில வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் மராட்டிய மாநிலம் கோலப்பூர் பகுதியை சேர்ந்த தத்தாத்ரி கோலி என்பவரது மகன் சுந்தர் (வயது 35) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர் மசினகுடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சுந்தரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, வடமாநில வாலிபர் உரிமம் பெறாத கள்ளத்துப்பாக்கியை நீலகிரி எல்லைக்குள் கொண்டு வந்துள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். மேலும் அதை கொண்டு வருவதற்கான காரணத்தையும் முறையாக தெரிவிக்கவில்லை. அதன் அடிப்படையில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.