கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்- வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்- வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தூத்துக்குடி

தூத்துக்குடி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். கருணாநிதி சிலை திறக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் தூத்துக்குடி 3-வது இடத்தை பிடித்தது. தற்போது முதல்-அமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். நம் கொள்கைகளை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அரசின் திட்டங்களை பரப்ப வேண்டும். தெருமுனை பிரசாரங்கள் நடத்த வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும் என்று கூறினார்.

தீர்மானம்

கூட்டத்தில், கருணாநிதி பிறந்தநாளான வருகிற 3-ந் தேதி அன்று தி.மு.க. வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழகங்கள் தோறும் கருணாநிதி உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியும், தி.மு.க கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், தி.மு.க. கொள்கை விளக்க பாடல்களளை ஒலிபரப்பி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். அன்றைய தினம் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்கு உணவு வழங்குவது, அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதனை விளக்க கூட்டம்

முன்னதாக நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர்கள் மன்னை இளங்கோவன், பவித்ரம் கண்ணன், சரத்பாலா ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story