வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை?

வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை?
பெரியநாயக்கன்பாளையம்
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
வடமாநில தொழிலாளி
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கூடலூர் கவுண்டம் பாளையம் பாரதிநகர் மலையோர கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது.
நேற்று அதிகாலையில் வடமாநில தொழிலாளி ஒருவர் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் காணப்பட்டன. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சவுத்திரி (வயது37) என்பதும், அவர் கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அடித்துக்கொலை?
முன்விரோதம் காரணமாக யாராவது அவரை அடித்துக் கொன்று இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். சஞ்சய் சவுத்திரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துணை சூப்பிரண்டு நமச்சிவாயம் கூறும்போது, "வடமாநில தொழிலாளி இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் இந்த வழக்கில் மேல் விவரங்கள் தெரியவரும். சஞ்சய் சவுத்திரியுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






