வடமாநில வாலிபர் கொடூரமாக அடித்து கொலை


வடமாநில வாலிபர் கொடூரமாக அடித்து கொலை
x
தினத்தந்தி 12 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-13T15:01:42+05:30)

கோவை அருகே வடமாநில வாலிபரை கொடூரமாக அடித்து கொன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை அருகே வடமாநில வாலிபரை கொடூரமாக அடித்து கொன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிணமாக கிடந்தார்

கோவையை அடுத்த செட்டிபாளையம் அருகே பச்சாபாளையம் உள்ளது. இங்குள்ள காலி இடத்தில் அடையாளம் தெரியாத நபர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர் உயிரிழந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பது தெரியவந்தது.

வடமாநில வாலிபர்

இதையடுத்து போலீசார் அந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் உடல் கிடந்த இடத்தின் அருகே உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் முதற்கட்டமாக உயிரிழந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த லாலன் ராவத் (வயது 33) என்பதும், அவர் கருமத்தம்பட்டி அருகே உள்ள தென்னம்பாளையத்தில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் தங்கி இருந்து வேலை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அடித்து கொலை

லாலன் ராவத்தை மர்ம ஆசாமிகள் கை, கால்களை கட்டி கடத்தி வந்து, இந்த பகுதிக்கு கொண்டு வந்து இருப்பதும், பின்னர் அவரை அடித்து கொலை செய்துவிட்டு உடலை வீசிச்சென்று இருக்கலாம் என்றும், உடல் அடையாளம் தெரியாமல் இருக்க கல்லால் முகத்தை சிதைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது, இந்த கொலை சம்பவம் நடந்ததை பார்க்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே லாலன் ராவத்தை எதற்காக கொலை செய்தனர்?, எத்தனை பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்ட வருகிறது என்றனர்.Next Story