பெரம்பூர்: ரெயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் - 10 கிலோ கஞ்சா பறிமுதல்
வட மாநிலத்திலிருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவரிடமிருந்து ரெயில்வே போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை, பெரம்பூர் ரயில்வே போலீசார் நேற்று மாலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை இரண்டில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது தான்பூரிலிருந்து பெங்களூரூக்கு சென்னை வழியாக செல்லும் விரைவு ரெயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்றது.
அதில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ராஜு குமார் (வயது 23) என்ற நபர் ரெயிலிலிருந்து இறங்கி சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் பயணம் செய்த ரயில் பெட்டியை சோதனை செய்தபோது, அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ரெயிலில் இருந்து கஞ்சாக்களை பறிமுதல் செய்த பெரம்பூர் ரயில்வே போலீசார் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பீகாரில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்து சென்னையில் கைமாற்றிவிட வந்ததாகவும் அப்போது போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ராஜூகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்