பாரம்பரிய முறைப்படி இரும்பு ஆயுதங்களைபட்டை தீட்டும் வடமாநிலத்தவர்கள்


பாரம்பரிய முறைப்படி இரும்பு ஆயுதங்களைபட்டை தீட்டும் வடமாநிலத்தவர்கள்
x

பாரம்பரிய முறைப்படி இரும்பு ஆயுதங்களைபட்டை தீட்டும் வடமாநிலத்தவர்கள்

தஞ்சாவூர்

தஞ்சை கொண்டிராஜபாளையம் சாலையோரத்தில் குடும்பத்துடன் முகாமிட்டுள்ள வடமாநிலத்தவர்கள் பாரம்பரிய முறைப்படி இரும்பு ஆயுதங்களை பட்டை தீட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

இரும்பு கருவிகள்

நம் அன்றாட வாழ்வில் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களால் ஆன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம். இதில் இரும்பிலான ஆயுதங்கள், பொருட்கள், கருவிகளுக்கு தனி இடம் உண்டு. இரும்பு கடினமானதாக இருப்பதால் தான் அதன் மூலம் அரிவாள், மரம் வெட்ட உபயோகப்படும் கோடரி, இறைச்சிகளை வெட்டும் கத்தி, சிற்பம் செதுக்கும் உளி உள்ளிட்ட கருவிகள் வடிவமைக்கப்படுகின்றன.

இதனால் இரும்பு கருவிகளுக்கு சந்தையில் எப்போதும் மவுசு அதிகம். இரும்பு பட்டைகள், கம்பிகளை சூடேற்றி அதற்கு பொருள் வடிவம் கொடுக்கும் தொழிலை செய்வோர் கொல்லர் என அழைக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் செய்யப்படும் இரும்பு கருவிகள் மிகவும் நேர்த்தியாகவும், தரமானதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தற்போது இரும்பு கருவிகள் செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வடமாநில தொழிலாளர்களின் வருகை

சமீபகாலமாக வடமாநிலத்தவர்கள் அதிகளவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி படையெடுக்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் பாரம்பரிய தொழிலை மையப்படுத்தி தங்களது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்கின்றனர்.

இதனை எடுத்து காட்டும் விதமாக தஞ்சை கொண்டிராஜபாளையம் சாலையோரத்தில் இரும்பு பட்டறை தொழிலை பரம்பரை, பரம்பரையாக செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் முகாமிட்டுள்ளனர்.

பாரம்பரிய முறைபடி

அவர்கள் இரும்பு பட்டைகளை சூடேற்றி அவை இளகியவுடன் சம்மட்டியால் அடித்து, அதற்கு லாவகமாக வடிவம் கொடுக்கின்றனர். பின்னர் தங்கள் கைவண்ணத்தில் உருவான இரும்பு கருவிகளான அரிவாள், கோடரி, கத்தி உள்ளிட்டவற்றை அங்கு தரையில் பரப்பி வைத்து விற்பனை செய்கின்றனர்.

அரிவாள்- கோடரி அரிவாள் உள்ளிட்ட கருவிகள் வெளிப்படையாக செய்வதால் அந்த வழியாக செல்வோர் பலர் வாகனங்களை நிறுத்தி கருவிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். ஒருசிலர் இரும்பு கருவிகளை செய்வதை வேடிக்கையும் பார்க்கிறார்கள்.

மக்கள் ஆர்வம்

இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில்:- நாங்கள் வயிற்று பிழைப்புக்காக தமிழகம் வந்தாலும், பாரம்பரிய தொழில் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மத்திய பிரதேசத்தை காட்டிலும் தமிழக மக்கள் அதிக ஆர்வமுடன் இரும்பு கருவிகளை வாங்கவும், பட்டை தீட்டவும் செய்கின்றனர். இதன்காரணமாக எங்கள் குடும்பத்தினரின் வயிற்று பசி நீங்குகிறது, வாழ்வாதாரம் உயர்கிறது. நாங்கள் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஒரு இடத்தில் முகாமிடுகிறோம்.பின்பு மற்றொரு கிராமத்துக்கு செல்வோம். கிராம புறங்களில் தான் இரும்பு கருவிகளின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். நாங்கள் தயார் செய்யும் அரிவாள்- ரூ.350, பெரிய கோடரி- ரூ.650, சிறிய கோடரி-ரூ.450, இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தி- ரூ.200, ரூ.100, களைவெட்டும் கருவி- ரூ.200, ரூ.400, உளி-ரூ.100, தொரட்டியில் கட்டப்படும் சிறிய அரிவாள்- ரூ.100 என்ற விலைகளில் விற்பனை செய்கிறோம் என்றனர்.


Next Story