கவரைப்பேட்டை அருகே வீடு புகுந்து திருட முயன்ற வடமாநிலத்தவர்கள் - பொதுமக்களிடம் சிக்கிய ஒருவர் அடித்துக்கொலை
வீடு புகுந்து திருட முயன்ற வடமாநிலத்தவர்களில் 2 பேர் தப்பி ஓடிய நிலையில் பொதுமக்களிடம் சிக்கிய ஒருவரை அடித்து உதைத்ததில் அவர் உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கெட்டனமல்லியை சேர்ந்தவர் வடுவம்மாள் (வயது 80). இவர் தனது வீட்டில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் மூவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த மூன்று வடமாநில மர்ம நபர்கள் திருட முயற்சி செய்தனர்.
உடனே மூதாட்டி வீட்டின் வெளியே வந்து கூச்சலிட திருட வந்தவர்கள் அங்கிருந்து ஓட முயற்சி செய்தனர். அக்கம் பக்கத்தினர் திருட வந்தவர்களை விரட்டி பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் மூவரும் தப்பி ஓட முற்பட்ட போது ஒருவர் மட்டும் அங்கிருந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டார். மற்ற இருவர் தப்பி ஓடி விட்டனர். பள்ளத்தில் விழுந்தவரை மீட்ட கிராம மக்கள் கோவத்துடன் அவரை அடித்து உதைத்ததில் அவர் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயங்கிய நிலையில் இருந்த வடமாநில வாலிபரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் வடமாநிலத்தவர்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருட்டு சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.