பட்டா வழங்கும் உத்தரவை செயல்படுத்தவில்லை-நில நிர்வாக கமிஷனர், மதுரை கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பட்டா வழங்கும் உத்தரவை செயல்படுத்தவில்லை-நில நிர்வாக கமிஷனர், மதுரை கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தனிநபர் நிலத்துக்கு பட்டா வழங்கும் உத்தரவை செயல்படுத்தாத நில நிர்வாக கமிஷனர், மதுரை கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தனிநபர் நிலத்துக்கு பட்டா வழங்கும் உத்தரவை செயல்படுத்தாத நில நிர்வாக கமிஷனர், மதுரை கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பட்டாவை ரத்து செய்தனர்

மதுரையை சேர்ந்த ரமணிகோபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தை எனது பெயரிலும், என் மனைவி பெயரிலும் கடந்த 1994-ம் ஆண்டு கிரையம் செய்தோம். அந்த இடத்திற்கு என் பெயரில் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். அந்த நிலம் பஞ்சமி நிலம் எனக்கூறி பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த கோர்ட்டு, எனது நிலத்தை ஆய்வு செய்து பட்டா வழங்கும்படி உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து பட்டா வழங்கினர். ஆனால் மீண்டும் எனக்கு வழங்கப்பட்ட பட்டாவை பஞ்சமி நிலம் எனக்கூறி ரத்து செய்தனர். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, எனது நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனாலும் தொடர்ந்து பட்டா வழங்கவில்லை. எனவே எனது நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அவமதிப்பு வழக்கு

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரருக்கு பட்டா வழங்கும் விவகாரத்தில் கோர்ட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தபோதும், அவற்றை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை. எனவே நில நிர்வாக கமிஷனர், மதுரை மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கை இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்கிறது.

வருகிற 10-ந்தேதி இந்த வழக்கில் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story