மனுக்கள் மீது உரிய பதில் அளிப்பதில்லை


மனுக்கள் மீது உரிய பதில் அளிப்பதில்லை
x
தினத்தந்தி 24 May 2023 12:30 AM IST (Updated: 24 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மனுக்கள் மீது உரிய பதில் அளிப்பதில்லை

கோயம்புத்தூர்

கோவை

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்று கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன், துணை கமிஷனர் சர்மிளா ஆகிேயார் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு அறக்கட்டளை தலைவர் கோபால் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது:-

சாலை அமைக்காமல் கணக்கு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், பழைய வார்டு எண் 38, 39, 40, 44 ஆகிய வார்டுகளில் கடந்த 2019-20-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 இடங்களில் 1 கோடியே 98 லட்சத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வார்டுகளை சேர்ந்த டிஸ்பென்சரி வீதி, குலாலர் வீதி, ஜகநாதபுரம் வீதி, பயனீர் மில் வீதி நீம்லேண்ட் வீதி, செங்காளியப்பன் நகர், இளங்கோ நகர் உள்பட 16 இடங்களில் சாலை அமைக்கப்படாமலே முறைகேடாக அப்போதைய அதிகாரிகள் அளவீட்டு புத்தகத்தில் சாலைபோடப்பட்டதாக கணக்கு காட்டி, பதிவு செய்துள்ளனர். ஒப்பந்ததாரருடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 2016 முதல் 2012-ம் ஆண்டுவரை 5 மண்டலங்களில் சுமார் 552 கிலோ மீட்டர் அளவில் 270 கோடி செலவில் போடப்பட்ட 380 சாலைகளையும் ஆய்வுக்குட்படுத்தி இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா? என்று கண்டறிய குழு அமைக்க வேண்டும். மேலும் மோசடியில் தொடர்புடைய ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்து கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

மாநகராட்சி இடத்தை காக்கவேண்டும்

போத்தனூர் அம்மன்நகர் குடியிருப்போர் சங்கத்தினர் அளித்த மனுவில், தெற்கு மண்டலத்துக்குட்பட்ட 85-வது வார்டு அம்மன் நகரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்கா இடத்தை, கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சவுரிபாளையம் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உரிய பதில் அளிப்பதில்லை, கோப்புகளை பார்வையிடவும் அனுமதிப்பதில்லை. முன்னாள் அதிகாரிகளை பாதுகாக்க இதுபோன்று செயல்படுவதாக கருதுகிறோம். எனவே தகவல் அளிக்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாபாரிகள் மனு

அண்ணா காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் அளித்த மனுவில், அண்ணா காய்கறி மார்க்கெட் பராமரிப்பு பணிக்காக இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், கவுண்டம் பாளையம் பிரபு நகர் பகுதிக்கு இடத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் காதுகேளாதோர் பள்ளி செயல்பட்டு வந்தது. இதனை திறன்மேம்பாட்டு பயிற்சி மற்றும் மாதிரி பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் காதுகேளாதோர் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காதுகேளாதோர்அமைப்பு தலைவர் ஐதர் அலி மனு அளித்துள்ளார்.


Next Story