நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை


நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை
x
தினத்தந்தி 15 Jun 2023 1:00 AM IST (Updated: 15 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்று சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவிடம் பெண் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்று சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவிடம் பெண் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் ஆய்வு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமசந்திரன், நத்தம் விஸ்வநாதன், ஈ.ஆர்.ஈஸ்வரன், டாக்டர் சி.சரஸ்வதி, அம்மன் அர்ச்சுனன், மதியழகன், மார்க்கண்டேயன், சட்டபேரவை இணை செயலாளர் தேன்மொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆஸ்பத்திரியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் கூடுதல் தளங்கள் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஏன் இன்னும் கட்டுமான பணிகளை தொடங்கவில்லை. டாக்டர்கள், செவிலியர்கள், வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

செவிலியர்கள் பற்றாக்குறை

மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, அதற்குரிய வசதிகள் உள்ளதா என்றும் டாக்டர்களிடம் கேட்டனர். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், சப்-கலெக்டர் பிரியங்கா, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் சரவண பிரகாஷ், டாக்டர் ராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.

அரசுக்கு பரிந்துரை

அதன்பின்னர் குழுவின் தலைவர் செல்வபெருந்தகை கூறும்போது, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, கூடுதலாக நியமிக்க பரிந்துரை செய்யப்படும். தற்போது கஜானாவில் பணம் இல்லை. சிறிது, சிறிதாக சேமித்து மக்கள் நலப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக குழுவின் தலைவர் செல்வபெருந்தகையிடம், ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவர், இங்கு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை. இருமல் என்று உள்நோயாளியாக சேர்ந்தால் 3 நாட்கள் கழித்து வீட்டிற்கு செல்லலாம் என்கின்றனர். ஆனால் இருமல் அப்படியே உள்ளது. செவிலியர்களுக்கு ஊசி போட தெரிவதில்லை என்றார்.

அதற்கு, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளரிடம் புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வபெருந்தகை கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story