ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்


ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்
x

ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் உற்சாகமாக பதில் அளித்துள்ளார். 11 நிமிடங்கள் 37 வினாடிகளில் ஓடும் அந்த வீடியோவில் ஆரம்பிக்கலாமா... என்று தொடங்கி மு.க.ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தொடங்கினார். மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சமீபத்தில் உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி எது?

பதில்:- தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் வெளியாக இருப்பதுதான் அன்மையில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி அளித்துள்ள செய்தி.

நீதிபதிகள் தேர்வில் மோதல்

கேள்வி:- நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் அமைப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கும், மத்திய சட்ட மந்திரிக்கும் நடக்கும் மோதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- அது ஆரோக்கியமானது அல்ல. ஜனநாயகத்தின் 4 தூண்களில் முக்கியமான ஒன்றாக மதிக்கப்படுகின்ற நீதித்துறையில் அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவமும் இடம்பெறவேண்டும் என்பதுதான் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. தி.மு.க.வும் அதைத்தான் விரும்புகிறது. அதற்காக நீதித்துறையின் சுதந்திரத்தில் குறுக்கிடும் வகையில் மத்திய அரசின் பிரதிநிதி ஒருத்தர், நீதிபதிகளின் தேர்வு குழுவான கொலீஜியத்தில் உறுப்பினராக நியமிப்பது முறையல்ல.

கள ஆய்வு

கேள்வி:- இப்போது, 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்று ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறீர்களே, அதன் செயல்பாடு எப்படி இருக்கும்?

பதில்:- களப்பணி என்பது எனக்கு புதிதல்ல. களத்தில் இருந்து வந்தவன் நான். திட்டங்களின் செயல்பாட்டை நேரில் பார்த்து முடுக்கிவிடுவதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறேன். முதலாவதாக பிப்ரவரி 1-ந் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களை விரிவாக ஆய்வு செய்யப்போகிறேன். என்னை பொறுத்தவரையிலும் முதல்-அமைச்சர் தொடங்கி கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டால் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக மாறும். அதற்கான செயல் திட்டம் தான் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டம்.

தி.மு.க. கூட்டணிதான் வெல்லும்

கேள்வி:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களத்தின் நிலவரம் எப்படி இருக்கிறது?

பதில்:- இந்த இடைத்தேர்தல் ஒரு துயரமான சூழலில்தான் வந்திருக்கிறது. எப்படி இருந்தாலும் இது தேர்தல் களம். இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தி.மு.க.வின் சாதனைகளும், நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்களும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தரும். இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் எந்த தேர்தலிலுமே தி.மு.க. கூட்டணிதான் வெல்லும் என்பது உறுதி.

எந்த சமரசமும் இல்லை

கேள்வி:- கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த நீங்கள், அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்துகொள்வதா? இது பின்வாங்கல் இல்லையா?

பதில்:- கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. அன்று அவர் படித்தது அரசின் உரை. ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் இல்லாமல், அவை குறிப்பில் இடம்பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம். அந்த தீர்மானம் ஏற்கப்பட்டு அவையின் மாண்பும், மக்களாட்சி தத்துவமும் நிலைநாட்டப்பட்டது. குடியரசு தின தேநீர் விருந்து என்பது காலங்காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு. குடியரசு தினத்தன்று அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை. முன்வாங்கலும் இல்லை. எந்த சமரசமும் இல்லை.

மேல்முறையீடு

கேள்வி:- பான் மசாலா, குட்கா ஆகிய போதைப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை ஐகோர்ட்டு நீக்கி இருக்கிறதே...

பதில்:- ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும்.

கேள்வி:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூருவில் ஏலம் விடுகிறார்களே...

பதில்:- இங்கே சிலர் அவங்க கட்சியையே ஏலம் விட்டுவிட்டு இருக்கிறார்கள்.

கேள்வி:- ஞாயிற்றுக்கிழமை கூட ஆய்வு பணியை மேற்கொள்கிறீர்களே..

பதில்:- முதல்-அமைச்சருக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அலுவலக நேரங்கள் எல்லாம் கிடையாது. முதல்-அமைச்சர் என்ற முறையில் நானே ஆய்வுகள் மேற்கொள்ளும்போது, அதிகாரிகள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெறுவார்கள். அதனால் திட்டங்களை நாம் எதிர்பார்ப்பதை விட வேகமாக நிறைவேற்றி முடிக்கலாம். அதனால்தான் நான் கள ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கேள்வி:- ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதே ...

பதில்:- "ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை குமரி முனையில் இருந்து நான் தான் தொடங்கிவைத்தேன். அது மிகப்பெரிய வெற்றி பயணமாக இருக்கும் என்று அன்றைக்கே சொன்னேன். இந்த பயணத்தில் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ அவர் பேசவில்லை. இந்தியாவின் அமைதிக்கு என்றைக்கும் தேவைப்படுகின்ற மதசார்பற்ற கொள்கைகளைத்தான் பேசியிருக்கிறார். அதனால் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, ஒற்றுமை பயணத்தை வெற்றியடையவைத்திருக்கிறது. இந்திய ஒற்றுமை பயணத்தில் முதல் கட்டத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்திருக்கும் ராகுல்காந்திக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்."

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.


Related Tags :
Next Story