அமைச்சர் செந்தில்பாலாஜி கைது பழி வாங்கும் நடவடிக்கை அல்ல-நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது பழி வாங்கும் நடவடிக்கை அல்ல என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது பழி வாங்கும் நடவடிக்கை அல்ல என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
தேரோட்டம்
நெல்லையில் பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் அடுத்த மாதம் ஆனித்தேரோட்டம் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் எந்த வளர்ச்சி பணியும் நடக்கவில்லை என்று முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி 5 முறை தமிழகம் வந்துள்ளார். கடந்த முறை வரும்போதுகூட ரூ.2 ஆயிரத்து 500 கோடிக்கு விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இதுபோல் பல பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. முதல்-அமைச்சர் சொல்வதை ஏற்க முடியாது.
பழி வாங்கும் நடவடிக்கை அல்ல
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது குறித்து கேட்டபோது, இது பழி வாங்கும் நடவடிக்கை அல்ல. அமைச்சர் வீட்டில் வருமானவரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முதல்-அமைச்சர் அ.தி.மு.க. ஆட்சியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது ஒரு கருத்தையும், தற்போது நடக்கும் சோதனை குறித்து ஒரு கருத்தையும் சொல்லி வருகிறார்.
கூட்டணியில் பாதிப்பு இல்லை
அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகளில் பேச்சு அளவில் கருத்து வேறுபாடு வந்துள்ளது. இதனால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி எந்த இடத்திலும் தரைக்குறைவாக பேசவில்லை. கூட்டணி குறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் முடிவு செய்வார்கள். நெல்லை நாடாளுமன்ற வேட்பாளராக தலைமை என்னை அறிவித்தால் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.