அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை படிச்சிட்டு 3 நாளா தூங்கல... ஒரு நீதிபதியின் வேதனை...!


அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை படிச்சிட்டு 3 நாளா தூங்கல...  ஒரு நீதிபதியின் வேதனை...!
x
தினத்தந்தி 23 Aug 2023 12:02 PM IST (Updated: 23 Aug 2023 12:04 PM IST)
t-max-icont-min-icon

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

சென்னை,

கடந்த 2006-2011 வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதேபோல, 2006-2011 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது.

கடந்த 2012ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த இரு வழக்குகளும் இன்று காலை முதல் மற்றும் இரண்டாவது வழக்குகளாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. இன்று இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில், "தி.மு.க. அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாட்களாக தூங்கவில்லை" என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்

மேலும், வழக்கு விசாரணையின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை என்றும், இந்த வழக்கின் தீர்ப்பு நீதிமன்ற மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததாகவும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் "வழக்கு விசாரணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை; அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளன; லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நிலைப்பாடு 2021க்குப் பிறகு மாறி இருப்பதை காண முடிகிறது; யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகவே செய்கின்றனர்; நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல, நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது" எனவும் நீதிபதி கூறினார்.

அதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story