பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தடை என அறிவிப்பு பலகை
பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தடை என அறிவிப்பு பலகை
பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
பெட்ேரால் குண்டு வீச்சு
கோவை, திண்டுக்கல், தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பா.ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பா.ஜனதா பிரமுகர்கள், அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகின்றது.
தீவிர பாதுகாப்பு பணி
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள், பா.ஜனதா கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் என 67 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று 29 ரோந்து வாகனங்கள் மூலமாகவும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன.
அறிவிப்பு பலகை
பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க கூடாது என மாவட்ட போலீஸ் துறை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்களுக்கு பாட்டில்களில் பெட்ரோல் வழங்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என பெட்ரோல் பங்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பெட்ரோல் பங்குகளில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.