குறைபாடுடைய தனியார் பள்ளி பஸ்களுக்கு நோட்டீஸ்


குறைபாடுடைய தனியார் பள்ளி பஸ்களுக்கு நோட்டீஸ்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் குறைபாடுடைய தனியார் பள்ளி பஸ்களுக்கு நோட்டீஸ் அனுப்பி மாவட்ட கலெக்டர் கற்பகம் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

பெரம்பலூர்

பஸ்களில் ஆய்வு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பள்ளி வாகனங்களில் வருடாந்திர கூட்டுக்குழு ஆய்வு அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆய்வு செய்யும் பணிகள் நேற்று நடந்தது. தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று ஆய்வு நடந்தது.

அவசர கால வழியின் செயல்பாடு

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ், சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) ராஜாமணி, கண்காணிப்பாளர் வேலாயுதம், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு ஆகியோர் தனியார் பள்ளி பஸ்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தனியார் பள்ளி பஸ்களின் ஆய்வின்போது பள்ளி பஸ்களில் உச்சநீதிமன்றம் மற்றும் அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும், பள்ளி பஸ்களில் அவசர கால வழியின் செயல்பாடு குறித்தும், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடுமையான நடவடிக்கை

அப்போது கலெக்டர் கற்பகம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 64 தனியார் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 380 பஸ்களில், முதற்கட்டமாக 225 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டது. குறைபாடுடைய 16 பஸ்கள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும். பஸ்களில் முன்புறமும், பின்புறமும் சென்சார், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் தனியார் பள்ளி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக விபத்து போன்ற அவசர காலங்களில் டிரைவர்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகளில் இருந்து பள்ளி குழந்தைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலமாக செயல் விளக்கம் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.


Next Story