செத்த கோழிகளை விற்பனை செய்த பெண்களுக்கு நோட்டீஸ்
செத்த கோழிகளை விற்பனை செய்த பெண்களுக்கு நோட்டீஸ்
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் பகுதியில் செத்த கோழிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, மாநகர அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் பாண்டியன்நகர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பெண்கள் சாலையோரம் அமர்ந்து சிக்கன் என்ற பெயரில் கோழிகளை விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அந்த இருவரும் செத்த கோழிகளை மஞ்சள் நிற பவுடர் மற்றும் மஞ்சள் பூசி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 22 கிலோ செத்த கோழிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அழித்தனர். மேலும் இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறும்போது "பொதுமக்கள் பொதுவாக கோழிகள் வாங்கும்போது தங்கள் கண்முன்பே கோழியை உரித்து புதிதாக வாங்க வேண்டும். கோழியின் தோல் கடினமாகவும், வெளுத்து போயும் இருந்தால் அது செத்த கோழி என்று அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற செத்த கோழிகள் விற்பனை மற்றும் உணவு தொடர்பான எந்த புகாராக இருந்தாலும் 9444042322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். என்றார்.
-------------