தற்காலிக பூ மார்க்கெட் கடைகளை காலி செய்ய நோட்டீஸ்
திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் கடைகளை வருகிற 17-ந் தேதிக்குள் காலி செய்ய மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தினசரி பூ மார்க்கெட்
திருப்பூர் பெருமாள் கோவில் அருகே தினசரி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பூ மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதற்காக தற்காலிக பூ மார்க்கெட் பல்லடம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் செயல்பட்டு வந்தது. தற்ேபாது புதிய பூ மார்க்கெட் கட்டுமான பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. ஆனாலும் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை காலி செய்யாமல் உள்ளனர்.
புதிய பூ மார்க்கெட் கடைகளை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி, புதிய பூ மார்க்கெட்டில் கடைகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையாளர் தங்கவேல்ராஜன் மற்றும் ஊழியர்கள் காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு சென்று அங்குள்ள தற்காலிக பூ மார்க்கெட்டில் அறிவிப்பு நோட்டீசை ஓட்டினார்கள்.
மின்இணைப்பு துண்டிக்கப்படும்
இந்த நோட்டீசில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட்டின் தற்காலிக மின் இணைப்புகளை வருகிற 17-ந் தேதி நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்பட உள்ளது. அதற்குள். கடைகளை காலி செய்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் அறிவிப்பில், இந்த அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் அதாவது வருகிற 17-ந் தேதிக்குள் தற்காலிக பூ மார்க்கெட் பயன்பாட்டுக்கு எடுத்த இடத்தை காலி செய்து, திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு தற்காலிக பூ மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் ஒட்டச்சென்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.