வீட்டை ஏலம் விட வங்கி சார்பில் நோட்டீஸ்: விஷம் தின்று லாரி டிரைவர் தற்கொலை
வீட்டை ஏலம் விட வங்கி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மனவேதனை அடைந்த லாரி டிரைவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
லாரி டிரைவர்
விராலிமலை தாலுகா வடுகப்பட்டி அழகு நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.14 லட்சம் கடன் பெற்று வீடு கட்டி இருந்தார். இந்தநிலையில் சம்பளம் கட்டுப்படியாகாததால் கடந்த சில வாரங்களாக ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதற்கிடையே சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் ரமேஷ் தவணை தொகையை சரிவர கட்ட முடியாமல் இருந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதையடுத்து வங்கி சார்பில் ரமேஷ் வீட்டில் ஏல நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ரமேஷ் கடந்த 24-ந் தேதி விராலிமலை- இனாம்குளத்தூர் சாலையில் பொருவாய் அருகே உள்ள ஒரு புளியமரத்தடியில் எலிமருந்து(விஷம்) சாப்பிட்டு விட்டதாக தனது குடும்பத்தினரிடம் செல்போனில் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.