காலாவதியான குளிர்பானங்கள் விற்ற 18 கடைகளுக்கு நோட்டீஸ்


காலாவதியான குளிர்பானங்கள் விற்ற 18 கடைகளுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 18 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 18 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

அதிரடி சோதனை

தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர், கோவை மாவட்ட கலெக்டர் ஆகியோரது உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 8 குழுவினர், கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பழச்சாறு கடைகள், தள்ளுவண்டி கடைகள், குளிர்பான விற்பனை கடைகள், பானி பூரி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

காலாவதியாகும் தேதி

கோவை மாநகர பகுதியில் உள்ள அனைத்து பஸ்நிலைய கடைகள், அவினாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 270 கிடைகளில் இந்த சோதனை நடந்தது.

சோதனையின்போது விற்பனைக்காக வைத்திருந்த பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு உள்ளதா?, தின்பண்டங்களில் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டு உள்ளதா?, குளிர்பானங்கள் தரமான முறையில் இருக்கிறதா என்பது குறித்து சோதனை செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

18 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் காலாவதியான நிலையில் விற்பனைக்காக வைத்திருந்த 47 லிட்டர் குளிர்பானம் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. இது தவிர 38 கடைகளில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பழ வகைகள் செயற்கை முறையில் பழுக்க வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் காலாவதியான நிலையில் உணவு பொருட்களை விற்பனை செய்த 18 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதுபோன்று குடிநீர் விற்பனை செய்யும் கடைகள், தயாரிக்கும் இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது.

அபராதம்

அதுபோன்று இந்த சோதனையின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உபயோகத்தில் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த 8 கடைகளுக்கு மொத்தம் ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் பழங்கள் விற்பனை அதிகமாக இருக்கும். எனவே இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். சோதனையின்போது காலாவதியான பொருட்களை விற்றாலோ, செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தது கண்டறியப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story