அழுகிய பழங்கள் விற்ற 5 கடைகளுக்கு நோட்டீஸ்
ஊட்டியில் அழுகிய பழங்களை விற்ற 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
ஊட்டி,
ஊட்டியில் அழுகிய பழங்களை விற்ற 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
திடீர் சோதனை
நீலகிரி மாவட்டத்தில் மாம்பழ சீசனையொட்டி ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்பட பல்வேறு கடைகளில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கார்பைடு கற்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வேதியியல் பொருட்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுரேஷ், சிவராஜ் ஆகியோர் ஊட்டி மார்க்கெட்டில் திடீரென சோதனை செய்தனர்.
ஊட்டி மார்க்கெட் கடைகள் உள்பட பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் எதுவும் கண்டறியப்பட வில்லை. ஆனால், அழுகிய நிலையில் இருந்த 12 கிலோ மாம்பழங்கள் மற்றும் 5 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அழுகிய பழங்கள் விற்ற 5 பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கூறியதாவது:-
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட அல்லது அழுகிய பழங்களால் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளை குடிக்கும் போது வயிறு உப்புசம் போன்ற அசவுகரியம் ஏற்படும். மேலும் வாந்தி, ஒவ்வாமை, அஜீரண கோளாறு ஏற்படக்கூடும். பாட்டிலில் அடைக்கப்பட்ட, வேதிப்பொருள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. இவை நம் குடலில் தொடங்கி உடலின் பல பாகங்களுக்கு எதிரானது.இனிப்பு சுவையை பழங்களில் அதிகப்படுத்தவும், கனிந்த நிறத்தை உருவாக்கவும், செயற்கையாக பழுக்க வைக்கவும், சிலர் வேதிப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இப்படி தயாராகும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மிக கடுமையான வயிறு கோளாறுகள் உருவாகலாம். எனவே, பழ வியாபாரிகள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பதை தவிர்க்குமாறும், மீறிவிற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.