ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்

ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்
கோவை
புலியகுளம் ரோடு, ரத்தினபுரி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
சாலையோர ஆக்கிரமிப்புகள்
கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களிடம் முறையாக நோட்டீஸ் வினியோகம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை புலியகுளம் ரோடு மற்றும் ரத்தினபுரியில் உள்ள ராஜீவ்காந்தி சாலையில் கடைகள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சாலையை ஆக்கிரமித்து இருந்ததாக தெரிகிறது. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி இருந்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் சென்றன.
நோட்டீஸ் வினியோகம்
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின்பேரில் புலியகுளம்ரோடு, ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ் வினியோகம் செய்து உள்ளனர். அதில் நோட்டீஸ் பெற்ற 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றி வருகிறார்கள். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கோவை மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புலியகுளம் ரோடு, ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக ஆக்கிரமித்து உள்ளவர்களிடம் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதுஎன்றனர்.






