கெங்கவல்லி அருகே 9 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் கைது


கெங்கவல்லி அருகே 9 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் கைது
x
தினத்தந்தி 10 July 2023 1:19 AM IST (Updated: 10 July 2023 5:45 PM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே 9 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

கெங்கவல்லி

கெங்கவல்லி அருகே 9 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

கெங்கவல்லி அருகே நடுவலூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அங்கமுத்து (வயது65). இவருடைய வீட்டில் கடந்த 1-ந்தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்து அங்கமுத்து கெங்கவல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது 27 வயது வாலிபர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை திருடி சென்றது தெரியவந்தது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு போலீசார் ஒதியத்தூர் கேட் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

அவர் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் ஒட்டர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பதும், பிரபல திருடன் என்பதும், ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை திருடி சென்றதும் தெரியவந்தது. மேலும் இவர் பகலில் வயதானவர்கள் இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியதும், சேலம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் கைவரிசை காட்டி அவர் மீது 65 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story