வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக வரும் நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் திருத்தங்களை மேற்கொள்ள வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.புதிய வாக்காளர்கள் சேர்க்கை, இடம் மாறிச்செல்லும் வாக்காளர்கள் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் என பல வகையான திருத்தங்களை மேற்கொள்ள வாக்காளர்களுக்கு இந்த காலகட்டத்தில் வாய்ப்புகள் தரப்படுகின்றன.

நவம்பர் 9-ந்தேதி

அந்த வகையில் வரும் நவம்பர் 9-ந்தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்கள் அல்லது மாநகராட்சிகளில் வெளியிடப்படுகிறது. அன்றிலிருந்து வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடங்கும்.

இந்தப் பணியின்போது புதிய பெயர் சேர்க்கை, இடமாற்றம், இறந்தவர் பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதற்கான கால அவகாசம் டிசம்பர் 8-ந்தேதிவரை 1 மாதம் காலம் வழங்கப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம்கள்

இந்த கால கட்டத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் நம்பரை இணைக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எனவே உரிய ஆவணங்களைக் கொடுத்து, இந்த காலகட்டங்களில் வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொண்டும், புதிய வாக்காளர்களை சேர்த்தும், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.

தற்போதுள்ள நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரியில் வெளியிடப்படும் போதுதான் தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தெரியவரும்.

இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டு உள்ளார்.


Next Story