நொய்யல் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?


நொய்யல் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?
x

பரிசல் போக்குவரத்து நிறுத்தம் மற்றும் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் நொய்யல் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள்- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

பரிசல் போக்குவரத்து நிறுத்தம்

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆறு செல்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நொய்யல் பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டம் கொந்தளம் பகுதிக்கு காவிரி ஆற்றில் பரிசல் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பரிசல் போக்குவரத்து மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய கொண்டு செல்லும் வியாபாரிகளும், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை பரிசலில் கொண்டு சென்று வந்து கொண்டிருந்தனர். இதனால் பயனடைந்து வந்தனர்.இந்நிலையில் கொரோனா காலத்தில் பல்வேறு காரணங்களால் இந்த வழியாக இயக்கப்பட்ட பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இந்த வழியாக கொந்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தவர்களும், அதேபோல் அக்கரையில் உள்ள சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களும் நொய்யல், கொடுமுடி, சாலைப்புதூர் பகுதிக்கு வந்து சென்றவர்கள் காவிரி ஆற்றில் பரிசல் மூலம் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாலம் கட்டப்படுமா?

இந்நிலையில் நொய்யல் -கொந்தளம் இடையே காவிரி ஆற்றில் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொந்தளம்- நொய்யல் இடையே காவிரி ஆற்றில் மிக குறைவான அளவே தண்ணீர் வந்து கொண்டிருந்தபோது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்மின் நிலையத்துடன் பாலம் அமைப்பதற்கான பணிக்காக காவிரி ஆற்றில் நொய்யல் முதல் கொந்தளம் வரை உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ் இருந்த கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு அந்த கற்கள் தரம் உள்ளதாக இருக்கிறதா? தரமற்றதாக இருக்கிறதா? என்பது குறித்து மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. அனுப்பப்பட்ட கற்களின் தன்மையும் என்ன என்றும் தெரியவில்லை.

கோரிக்கை

நொய்யல் பகுதியில் இருந்து கொந்தளம், கபிலர்மலை, வையப்பமலை, எலச்சிபாளையம், திருச்செங்கோடு, வேலகவுண்டன்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு இந்த வழியாக குறைந்த தூரத்தில், குறைந்த நேரத்தில் சென்று வந்தனர். அதேபோல் அக்கரையில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளிலும், முக்கியமான விசேஷ நாட்களிலும் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். பரிசல் இயக்கப்படாத காரணத்தால் நொய்யல் பகுதியில் இருந்து பரமத்தி வேலூர், நாமக்கல் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல் காவிரி கரையான அக்கரையில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதிகள் வழியாக வந்து நொய்யல், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நொய்யல் -கொந்தளம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிக் கொடுத்து வர்த்தகத் தொடர்பை அதிகரிக்க வேண்டும். குறுகிய நேரத்தில் வெளியூர்களுக்கு சென்று வர இப்பகுதியில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 கிலோ மீட்டர் சுற்றி வருகிறோம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

மரவாபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த குணசேகரன்:- நொய்யல் பகுதியில் இருந்து கொந்தளம் பகுதிக்கு பரிசல் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு மீண்டும் இந்த பரிசல் வழியாக வீடுகளுக்கு திரும்புவார்கள். இதனால் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்று வரவேண்டியது இல்லை. ஆனால் தற்போது பரிசல் இயக்கப்படாததால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. இதனால் நொய்யல் பகுதியில் இருந்து பரமத்தி வேலூர் சென்று அங்கிருந்து கொந்தளம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வர வேண்டிய நிலை உள்ளது.

பயனுள்ளதாக இருக்கும்

குறுக்குச்சாலை பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ்குமார்:- நொய்யல் பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் செயல்படுத்தப்பட்டு வந்த பரிசல் போக்குவரத்து மூலம் கபிலர்மலை, ஜேடர்பாளையம், வையப்பமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் குறுகிய நேரத்தில் சென்று வந்தனர். தற்போது பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டினால் இந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆட்டோக்கள், பஸ்கள், லாரிகள், கார்கள் போன்றவை இந்த பாலத்தின் வழியாக குறுகிய தூரத்தில் காலவிரயம் இன்றி சென்று வரலாம். அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

வர்த்தகம் மேம்படும்

நொய்யல் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கவேல்:-

நான் சிறுவயதில் காவிரி ஆற்றில் செயல்பட்டு வந்த பரிசல் வழியாக சென்று வந்தேன். ஆனால் தற்போது பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் இந்த காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டால் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பயன்பெறுவார்கள். மேலும் விவசாய பொருட்களை விற்பனை செய்வது மூலம் வர்த்தகம் மேம்படும்.

எரிபொருளும் மிச்சமாகும்

மரவாபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ஜெயராம்:-

நொய்யல் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் எளிதில் சென்று விடலாம். இதனால் தூரமும், ேநரமும் குறையும், எரிபொருளும் மிச்சமாகும். அதேபோல் இந்த வழியாக பஸ் போக்குவரத்து இயக்கப்படும்போது அதிக பேர் பயனடைவார்கள். விவசாயிகள் தங்களது விளை பொருட்களை அக்கரைக்கு குறுகிய நேரத்தில் விற்பனைக்காக கொண்டு சென்று வரலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story