நிறம் மாறிய நொய்யல் ஆறு
திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்து நுரையுடன் செல்கிறது. இதனால் ஆற்றுநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சாய ஆலைகள்
திருப்பூர் பின்னலாடை துறையின் அங்கமாக உள்ள சாய ஆலைகள், பிரிண்டிங், வாஷிங் நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன் சாயக்கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டும் உள்பட பல விதிமுறைகளுக்கு உட்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலே குடோன்கள் மற்றும் வீடுகளில் பிளாஸ்டிக் டிரம் மூலம் பட்டன், ஜிப் போன்றவற்றுக்கு சாயமேற்றுகின்றனர். பின்னர் சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றனர். அவ்வாறு நேற்று திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் கலந்த சாயக்கழிவுநீரால் ஆற்றுநீர் நிறம் மாறி நுரையுடன் பாய்ந்தது.
பயிர்கள் நாசம்
இதனால் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும்போது பயிர்கள் காய்கின்றன. இதனால் ஆற்றுநீரை பயன்படுத்த விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாசுக்கட்டுபாட்டு வாரியம் சாயக்கழிவுகளை கலந்துவிடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.