தெரு நாய் கடியில் இருந்து காப்பாற்ற கோரி அம்மனுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்


தெரு நாய் கடியில் இருந்து காப்பாற்ற கோரி அம்மனுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 12 March 2023 7:11 AM GMT (Updated: 12 March 2023 7:31 AM GMT)

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் தெரு நாய் கடியில் இருந்து காப்பாற்ற கோரி குடியிருப்போர் சங்கத்தினர் அம்மனுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரி குடியிருப்போர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் குரோம்பேட்டையை சேர்ந்த அரசு நூலகத்தில் நூலகராக வேலை பார்த்து வந்த தேன்மொழி என்ற 55 வயது பெண், குரோம்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தெரு நாய் விரட்டியதில் பதறி அடித்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தாம்பரம் மாநகராட்சி பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள கருமாரியம்மன் கோவிலுக்கு குடியிருப்போர் சங்கத்தினர், சமூக ஆர்வலர் சந்தானம் தலைமையில் கையில் வேப்பிலை, பழம், பூ உள்ளிட்ட அர்ச்சனை தட்டுடன் ஊர்வலமாக சென்று "தெரு நாய்களின் கடியில் இருந்து எங்களை காப்பாற்று தாயே" என கோஷமிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை கருமாரி அம்மனிடம் அளித்தனர்.

மேலும் நாய் விரட்டியதால் கீழே விழுந்து பலியான தேன்மொழி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.


Next Story