குரூப்-4 பணியாளர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் -ராமதாஸ்


குரூப்-4 பணியாளர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் -ராமதாஸ்
x

குரூப்-4 பணியாளர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜூலை 24-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 10,117 என்பதில் இருந்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேர்வு எழுதியவர்களால் கடந்த இரு மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் 4½ லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. நடப்பு தி.மு.க. அரசின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக இந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆண்டுக்கு 1½ லட்சம் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

மாறாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வகை பணிகளுக்கும் சேர்த்து 10 ஆயிரம் பேர் கூட தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. குரூப்-4 பணிக்கான தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அரசுத்துறைகளின் தேவையையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள குரூப்-4 பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக, அதாவது 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு 1½ லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் இருண்ட வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story