8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் கற்றல் இடைவெளிக்குத் தீர்வு 'எண்ணும், எழுத்தும்' திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறதா? ஆசிரியர்கள், பெற்றோா்கள் கருத்து
‘எண்ணும், எழுத்தும்' திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறதா? என்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
கொரோனா நோய்த் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.
கற்றல் இடைவெளி
தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும் ஆரம்பக் கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படைகூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.
இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை.
எண்ணும் எழுத்தும் திட்டம்
இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது.
அதற்காக உருவானதுதான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது.
அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.
அரும்பு, மொட்டு, மலர்...
குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்.
அரும்பு என்பது படிக்கத் தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.
இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.
ஆடல், பாடல், கதை சொல்லல்...
தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.
இப்படியாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் கற்பிக்கப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்து இருக்கிறதா?.
2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் இலக்கு நிறைவேறி வருகிறதா? என்பது பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
மாணவர்களுக்கு சிறந்த திட்டம்
விழுப்புரம் அருகே தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா:-
2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் அரும்பு, மொட்டு, மலர் என்று பிரித்து மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடுகள் நடைபெறுகிறது. இதில் அரும்பு நிலை மாணவர்களை மொட்டுக்கும், மொட்டு நிலையில் உள்ள மாணவர்களை மலராக மாற்றுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் மூலம் அரும்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் மூலம் கற்பிப்பதால் மிக எளிதாக மாணவர்கள் புரிந்து கற்றுக்கொள்கிறார்கள். அதேநேரத்தில் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் பாடங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதுபோல பயிற்சி ஏடுகள் மூலம் எழுத்து பயிற்சி செய்வதால் அவர்கள் எளிதில் தேர்வு எழுத உதவுகிறது. மாணவர்கள் ஆங்கிலத்தில், மூன்று எழுத்து வார்த்தைகள் மூலம் கற்றுக்கொள்வதால் ஆங்கில உச்சரிப்பையும் சிறப்பாக உச்சரிக்கின்றனர். எண்ணும் எழுத்தும் திட்ட வகுப்பறையில், பாடல் களம், கதைக்களம், செயல்பாட்டுக்களம், படைப்புக்களம், படித்தல் களம் மற்றும் பொம்மலாட்டக்களம் போன்றவை அமைக்கப்பட்டு குழந்தைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது. மேலும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகமான எழுத்து பயிற்சி மற்றும் ஒரு செயல்பாட்டை மீண்டும் அவர்களுக்கு கற்பிக்க வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும். எழுதவும், படிக்கவும் தெரியாத மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டம்.
முதல் பருவத்தில் இடர்பாடுகள்
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரிைய சகாயஉஷா:-
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் குழந்தைகள் மனம் மகிழ்ந்து கற்றலில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்திட்டத்திற்கான துணைக்கருவிகள் மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் உயிரோட்டமான சூழலை உருவாக்கியுள்ளது. முதல் பருவத்தில் இருந்த சில இடர்பாடுகள் இரண்டாம் பருவத்தில் சரிசெய்யப்பட்டது. எடுத்துக்காட்டாக துணைக்கருவிகளுக்குரிய படங்களின் பட்டியல் தரப்பட்டது. ஆசிரியர் கையேடு ஆசிரியர்களின் நேரத்தை சேமிக்க உதவியது.
அதுபோல் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி ஏடுகள் மாணவர்களை சுயசிந்தனை கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் உருவாக்க உதவுகிறது.
மாணவர்களின் எண்ணிக்கை, அதிகமான வகுப்பறை மற்றும் ஒரே ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்பறையை கையாளும் சூழல், குறிப்பிட்ட காலஇடைவெளியில் தரப்பட்ட பாடப்பகுதிகளை முடித்து அனைத்து மாணவர்களையும் கற்றல் அடைவு பெறச்செய்வது போன்ற காரணங்கள் ஆசிரியர்களுக்கு ஒரு சவாலான சூழலை உருவாக்குகிறது.
மேலும் உடல்நலக்குறைவு மற்றும் பிற காரணங்களால் மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள், பள்ளிக்கு வர இயலாதபோது கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் சிறு தடுமாற்றங்களுக்கு உட்பட வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் அது சரிசெய்யப்பட வேண்டும்.
வரவேற்க கூடியது
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினராக இருக்கும் கல்பனா:-
எனது மகள் சுபஸ்ரீ, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறாள். எண்ணும் எழுத்தும் திட்டம் இப்பள்ளியில் சிறப்பாக நடைபெறுகிறது. ஆசிரியர்கள், மிகவும் எளிமையான முறையில் குழந்தைகளுக்கு எளிதில் புரியும் விதத்தில் பயிற்சி அளிக்கிறார்கள். எழுதவும், எழுத்துக்கூட்டி படிக்கவும் மிகுந்த சிரமப்பட்ட குழந்தைகள் தற்போது இத்திட்டத்தின் மூலம் சிறந்த முறையில் எழுத்துக்கூட்டி படிக்கவும், எழுதவும் செய்கிறார்கள். இத்திட்டத்திற்காக வழங்கியுள்ள பயிற்சி ஏடுகள் எளிதாக இருக்கிறது, குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.
கற்றல் திறன் மேம்படுகிறது
செஞ்சியை சேர்ந்த பள்ளி மாணவரின் தந்தை மாயக்கண்ணன்:-
அரசு பள்ளியில் எனது மகன் படிப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்த சிறுவயதிலேயே அவன் எழுதுவது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. குழந்தைகள் படிப்பிலும், எழுதுவதிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அரசு முக்கியத்துவம் அளித்து எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.
இத்திட்டத்தின் மூலமாக பயிற்சி அளிக்கக்கூடிய ஆசிரியர்களும், ஒரு குழந்தையாக மாறி அவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதால் முன்பெல்லாம் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்து அழுத குழந்தைகள் தற்போது மிகுந்த ஆர்வமுடன் பள்ளிக்கு செல்கின்றனர். குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளை இன்னும் வளர்ச்சிக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
திண்டிவனம் சலவாதியை சேர்ந்த பிரகாஷ்:-
எனது மகள் ஹேமவர்ஷினி திண்டிவனம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். எனது மகளுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் தமிழ், ஆங்கிலம், கணிதம் சொல்லித்தரப்படுகிறது. தினமும் சொல்லித்தரப்படுவதால் குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு ஏதுவாகிறது. மேலும் வீட்டிற்கு வந்ததும் வீட்டுப்பாடங்களையும் சரிவர செய்கிறார்கள். 2025-க்குள் 8 வயது முழுமை அடைந்த குழந்தைகள் அனைவரும் எழுத படிக்க தெரிந்திருக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். அரசின் நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில் இப்பயிற்சியில் இன்னும் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்தால் வசதியாக இருக்கும்.
நல்ல பலன்
கள்ளக்குறிச்சி அருகே அணைக்கரைகோட்டலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஏழுமலை:- எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்கள் எளிதாக கல்வியை கற்று வருகின்றனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த (2022-2023) கல்வியாண்டில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள், தொடக்கத்தில் அடிப்படை கல்வியில் தங்கள் பழைய நிலையை தொடர்வதற்கு முதல் 2 மாதங்கள் பாடங்கள் நடத்தாமல் அடிப்படை கல்வி மட்டுமே நடத்த வேண்டும் என்று அரசும், கல்வித்துறையும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கும் நல்ல பலன் கிடைத்து வருகிறது. இருப்பினும் கொரோனா காலக்கட்டத்தில் வகுப்புகள் நடத்தப்படாததால் மாணவர்களுக்கு கற்றலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது இன்னும் சரியாகாத காரணத்தால், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது ஆசிரியர்களுக்கு பெரிய சவாலாகவே உள்ளது. இருப்பினும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியாலும், ஆசிரியர்களின் கடினமுயற்சியாலும் விரைவில் மாணவர்கள் பழைய நிலைக்கு வருகின்றனர். இந்த கல்வியாண்டு முடிவதற்குள் 100 சதவீதம் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
குழந்தைகள் மகிழ்ச்சி
கள்ளக்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவியின் தாயார் மீனா:-
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்கள் நன்கு புரிந்து கல்வி கற்று வருகின்றனர். குழந்தைகள் எந்த வித அச்சமும் இன்றி கல்வி கற்று வருகின்றனர். பாடல், நடனம் மூலம் பாடம் சொல்லி கொடுப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். குறிப்பாக எளிதாக எழுத, படிக்க குழந்தைகள் கற்று வருகின்றனர்.இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.