எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க விழா

எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க விழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் புதிய பஸ் நிலைய வளாகத்தில் எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க விழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. பிரசார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் வரும் 2025-ம் ஆண்டிற்குள் அனைத்து பகுதிகளிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பெற வேண்டும் என்ற நோக்குடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அனைத்து பகுதிகளிலும் பள்ளி கல்வித்துறையின் மூலம் இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிராமப்பகுதியில் பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வாகனம் மூலம் கலைக்குழுவினர் நாட்டுப்புறப்பாடல் மற்றும் பாரம்பரிய நடனம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பெற்றோர் ஒத்துழைப்பு கொடுத்து அரசு செயல்படுத்தும் திட்டங்களை பயன்படுத்தி ஒரு குழந்தை கூட விடுபடாத வகையில் அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பெற்ற குழந்தைகளாக மாறி 100 சதவீதம் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
இந்த விழிப்புணர்வு வாகனம் நகர் மற்றும் சத்திரக்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதில், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.






