தனியார் பஸ் மோதி நர்சு பலி


தனியார் பஸ் மோதி நர்சு பலி
x

தனியார் பஸ் மோதி நர்சு பலியானார். விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களால் விபத்து நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

திருச்சி

தனியார் பஸ் மோதி நர்சு பலியானார். விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களால் விபத்து நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நர்சு

திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மறுவரசி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஜெயம் நர்சிங் ஹோமில் நர்சாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் மறுவரசி தனது அண்ணன் விஜய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி மெயின் கார்டுகேட் அருகே அருணாச்சலம் மன்றம் முன்பு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து கரூர் சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தவறி கீழே விழுந்த மறுவரசி பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் இறந்தார்.

டிரைவர் கைது

இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தனியார் பஸ் டிரைவர் கரூர் மாவட்டம் ஆதனூர் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த ஜெகநாதன் (30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பஸ்சை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து சத்திரம் பஸ் நிலையம் வந்து கரூர் செல்லும் அனைத்து பஸ்களும் கோஹினூர் தியேட்டர் சந்திப்பில் இருந்து கரூர் பைபாஸ் ரோடு வழியாக சத்திரம் பஸ் நிலையம் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் கரூர் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

ஆனால் கடந்த சில மாதங்களாக கரூர், கோவை செல்லும் ஒரு சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் மாரிஸ் மேம்பாலம் வழியாக மெயின் கார்டுகேட் வந்து சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்து வருகிறது. நேற்று நடந்த விபத்தில் விதிமுறைகளை மீறி சென்ற பஸ்சால் நர்சு இறந்துள்ளார். எனவே இது போன்ற விபத்துகள் நடைபெறுவதை தடுக்க போக்குவரத்து விதிகளை பின்பற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story