தேவாலா பகுதியில் நர்ஸ் தற்கொலை வழக்கு; கணவர் வெளிநாடு தப்பி ஓட்டம்?-பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவு

தேவாலா பகுதியில் நர்சை தற்கொலை வழக்கில் கணவர் வெளிநாடு தப்பிஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி மகிளா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊட்டி
தேவாலா பகுதியில் நர்சை தற்கொலை வழக்கில் கணவர் வெளிநாடு தப்பிஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி மகிளா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நர்ஸ் தற்கொலை
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பால். இவருடைய மனைவி அச்சம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அச்சம்மாள் வெளிநாட்டில் நர்சாக பணிபுரிந்தார்.
இதைத்தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய ஜோஸ் பால் மற்றும் அச்சம்மாள் தம்பதியினர் பிள்ளைகள் கல்விக்காக நீலகிரி மாவட்டம் தேவாலா அருகே உள்ள பாடந்துறை பகுதியில் குடியேறினர். இந்தநிலையில் 1998-ம் ஆண்டு அச்சம்மாள் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உடல்நிலை சரியில்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால் அச்சம்மாள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் மீண்டும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் அச்சம் மாளை தற்கொலைக்கு தூண்டியதாக ஜோஸ்பாலை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவு
இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கொரோனாவுக்கு பின்னர் வழக்கு விசாரணைக்காக ஜோஸ்பால் ஊட்டி மகளிர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. சி.பி.சி.ஐ.டி போலீசாரின் விசாரணையில் அவர் தலைமறைவானது தெரிய வந்தது.
இந்த நிலையில் விசாரணை நிலுவையில் இருக்கும் போது நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் ஜோஸ் பாலுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். மேலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.இதற்கிடையே ஜோஸ்பால் ஆங்கிலோ-இந்தியன் என்பதாலும், அவருக்கு வெளிநாட்டில் வசிக்கும் உரிமை உள்ள கிரீன் கார்ட் இருப்பதாலும், அவருடைய மகன் வசிக்கும் அமெரிக்காவிற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.






