நிரந்தர பணி வழங்கக்கோரி நர்சுகள் நூதன ஆர்ப்பாட்டம்
நிரந்தர பணி வழங்கக்கோரி நர்சுகள் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காலத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டு தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள், பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர தன்மையுடன் பணி வழங்கக்கோரி கடந்த 9 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் 10-வது நாளான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நர்சுகள் கலெக்டர் அலுவலகம் முன்பு தங்களது கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி தலைமை தாங்கினார். நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள், தங்களுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். நேற்று முன்தினம் அவர்கள் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.