வால்பாறையில் 42 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு
வால்பாறையில் 42 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதியுடன் ஊட்டச்சத்து மாதவிழா போஷான்மா திட்டம் தொடங்கப்பட்டது. வால்பாறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் திட்ட அலுவலர் ரதிபிரியா இந்த திட்டத்தை 42 அங்கன்வாடி மையங்களில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து அவர் கூறியதாவது:-
வருகிற 30-ந்தேதி வரை இந்த திட்டம் அனைத்து அங்கன்வாடி மையங்களில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு சத்துள்ள ஊட்டச்சத்து உணவுகளை கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு வலியுறுத்தப்படும். பச்சை காய்கறிகளை வீடுகளில் அதிகம் பயன்படுத்துவதன் அவசியம், சிறு தானிய உணவுகளால் குழந்தை பருவத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு வீடுகளிலும் வீட்டுத் தோட்டங்கள் அமைத்து பச்சை காய்கறிகள் பயன்படுத்துவது, கீரைவகைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.