சத்துணவு ஊழியர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 May 2023 7:00 PM GMT (Updated: 29 May 2023 7:00 PM GMT)

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்து சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறை படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் தலைமையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் கணேசன், வட்ட செயலாளர் தவமணி பீட்டர், தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ், தணிக்கையாளர் வசிஷ்டர் தர்மலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி நிரைவுறை ஆற்றினார். நிறைவாக மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

தரையில் அமர்ந்து

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சத்துணவு ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story