சனாதனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


சனாதனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x
தினத்தந்தி 6 Sept 2023 11:00 AM IST (Updated: 6 Sept 2023 11:01 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியை திசை திருப்ப சனாதனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக-விற்கு கடும் கண்டனம் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடியலை நோக்கி' என்று மேடைக்கு மேடை தேர்தல் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., இன்று தமிழ்நாட்டு மக்களை 'விரக்தியை நோக்கி' அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என பலமுனைத் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திமுகவின் மீது மக்களுக்குள்ள வெறுப்பினை, அதிருப்தியினை திசை திருப்பும் வகையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி அரசாங்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், அதற்குரிய பலனை மக்கள் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், சனாதனம் குறித்து பேசுவது தேவையற்றது.

சமதர்மம் குறித்து பேசும் தி.மு.க., முதலில் தி.மு.க.வில் சமதர்மம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். திமுகவின் மீதுள்ள அதிருப்தியை திசை திருப்ப முயன்றாலும் அது மக்கள் மத்தியில் நிச்சயம் எடுபடாது. வருகின்ற தேர்தலில் திமுக மண்ணைக் கவ்வுவது நிச்சயம். அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அகற்றும் ஆயுதமாகும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்றார்.


Next Story