அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம்:ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சுவரொட்டி யுத்தத்தால் பரபரப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தை தொடர்ந்து நாகர்கோவிலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறி, மாறி சுவரொட்டி யுத்தம் நடத்தி வருகிறார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தை தொடர்ந்து நாகர்கோவிலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறி, மாறி சுவரொட்டி யுத்தம் நடத்தி வருகிறார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை பிரச்சினை
அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் தமிழகம் முழுவதும் அக்கட்சியில் பூதாகரத்தை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே அவர்களுடைய ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் தனித்தனியாக தங்களது தலைவர்தான் அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி சுவரொட்டி ஒட்டி வருகிறார்கள். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாகர்கோவிலில் சுவரொட்டிகள்
அதேபோல குமரி மாவட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தனித்தனியாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நாகர்கோவில் நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் ஓ.பன்னீர்செல்வம் படம் இடம்பெறவில்லை. அதில், கழகம் ஒற்றை தலைமையை நோக்கி, ஒன்றரை கோடி தொண்டர்களுடன் மக்களின் முதல்வர் எடப்பாடியார் வழியில் அ.தி.மு.க. என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றொரு சுவரொட்டியில் அம்மா வழியில் கழகத்தை காக்க, தலைமை ஏற்க வாருங்கள் தலைவா என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
இதேபோல் நாகர்கோவிலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் எடப்பாடி பழனிசாமி படம் இல்லை. அதில் அம்மா அவர்களின் அரசியல் வாரிசு, தொண்டர்களின் பாதுகாவலர் ஓ.பி.எஸ். அவர்களே ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.
பரபரப்பு
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருவருடைய ஆதரவாளர்களும் மாறி, மாறி சுவரொட்டி யுத்தத்தில் ஈடுபட்டு வருவது திடீர் பரபரப்பை உருவாக்கி உள்ளது.