'ஓ.பன்னீா்செல்வத்துக்குதான் தொண்டர்கள் ஆதரவு உள்ளது' சேலத்தில் புகழேந்தி பேட்டி


ஓ.பன்னீா்செல்வத்துக்குதான்   தொண்டர்கள் ஆதரவு உள்ளது  சேலத்தில் புகழேந்தி பேட்டி
x

‘ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் தொண்டர்கள் ஆதரவு உள்ளது’ என்று சேலத்தில் புகழேந்தி கூறினார்.

சேலம்

சேலம்,

ஐகோர்ட்டு தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிபதியின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். ஒரு வழக்கின் தீர்ப்பில் யாருக்கு பாதமாக இருக்கிறதோ அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வது வழக்கம். எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக வந்து இருந்தாலும் அவரும் சுப்ரீம் கோர்ட்டுக்குதான் செல்வார். அதன்படி இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்.

மக்கள் ஆதரவு

இதேகோர்ட்டு தான் ஏற்கனவே அதிகாலையில் தீர்ப்பு வழங்கியது. தற்போது தீர்ப்பு எப்படி மாறியது என்று தெரியவில்லை. இந்த தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளன. இருப்பினும் முழுமையாக படித்து பார்த்த பிறகு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார்கள். அங்கு எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. சேலத்தில் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்திற்கு பிறகு சேலம் வரலாறு படைக்க போகிறது.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது ஏதாவது ஒரு புதிய திட்டம் கொண்டு வந்து இருக்கிறாரா?. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி ஏன் பொறுப்பு ஏற்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகு, அவர் அமைதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றலாம் என்று அழைப்பு விடுத்தார். அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்கவில்லை.

சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பதவிக்கு வரலாம் என்று கூறுகிறார்கள். அவ்வாறு ஒரு சாதாரண தொண்டனை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்தால் ஒத்துக்கொள்கிறோம். 100 சதவீதம் ஓ.பன்னீர்செல்வம் சரியாக செயல்படுவதால் அவருடன் இணைந்து செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story