அ.தி.மு.க.வை அழிக்க பாடுபட்டு வருபவர் ஓ.பன்னீர்செல்வம்


அ.தி.மு.க.வை அழிக்க பாடுபட்டு வருபவர் ஓ.பன்னீர்செல்வம்
x

அ.தி.மு.க.வை அழிக்க ஓ.பன்னீர்செல்வம் பாடுபட்டு வருகிறார் என்று சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.

விழுப்புரம்

அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொண்டாடுவது குறித்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசியதாவது:-

எம்.ஜி.ஆரால் 1972-ல் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் 50 ஆண்டு காலம் நிறைவு செய்து 32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்ததற்கு தொண்டர்கள்தான் காரணம். எத்தனையோ சோதனைகள், போராட்டம் என்பது அ.தி.மு.க.விற்கு புதியதல்ல, தொண்டர்கள் பலம்தான் அ.தி.மு.க.வின் பலம். கருணாநிதியை விரட்ட தொடங்கப்பட்டதே இந்த இயக்கம். அந்த நோக்கத்திற்கு எதிராகவும், தி.மு.க.விற்கு ஆதரவாகவும் செயல்படுபவர்தான் ஓ.பன்னீர்செல்வம்.

ஜெயலலிதா நம்மோடு இல்லாததற்கு காரணம் தி.மு.க., தானும் தன் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும், அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பாடுபட்டு வருபவர் பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களும், அ.தி.மு.க.விற்கு துரோகம் இழைப்பவர்கள் எல்லோரும் அனாதையாகத்தான் போவார்கள்.

மக்களின் எதிர்ப்பு

தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 16 மாதங்களில் மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பை இந்த அரசு சந்தித்து வருகிறது. எப்போது இந்த ஆட்சியை தூக்கி எறியலாம் என மக்கள் தயாராக உள்ளனர். தி.மு.க. அரசு செய்யும் அராஜகங்களை மக்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டும்.

அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும். அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது. எப்போதும் எந்த நேரத்திலும் தேர்தல் வைத்தாலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராஜா, வளவனூர் நகர செயலாளர் முருகவேல், விழுப்புரம் நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், இணை செயலாளர் செங்குட்டுவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story