ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லைமுன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தகவல்
கே.பி.முனுசாமி தகவல்
ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
தீவிர பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். அதன்படி நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.வி.ராமலிங்கம், அன்பழகன், பொன்னையன், விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், மாநகரச் செயலாளர் மனோகரன், த.மா.கா. மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வி.வி.சி.ஆர். நகர், செல்வ விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், அய்யனாரப்பன் கோவில் வீதி, அகத்தியர் வீதி, மீரான் மைதீன் வீதி உள்பட பல்வேறு இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு தீவிரமாக வாக்குகள் சேகரித்தனர்.
தேர்தல் வாக்குறுதி
முன்னதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
அ.தி.மு.க. சார்பில் எளிய தொண்டனை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். அவர் குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மக்களுக்கான பணிகளை நிறைவேற்றியதாக கூறும் தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை. இதற்கு மக்கள் இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் அதில் மக்களுக்கு உருப்படியான ஒரு வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அ.தி.மு.க. இல்லை என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி வருகிறார். அவர் சொல்வது பபூன் கூறுவது போல் நகைச்சுவையாக உள்ளது.
வாய்ப்பில்லை
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்றும் அ.தி.மு.க.வின் லட்சக்கணக்கான தொண்டர்கள் உழைக்கிறார்கள். அவர்களைப்போல ஓ.பன்னீர்செல்வத்தால் உழைக்க முடியுமா? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் நிலைக்க வேண்டும் என்று தொண்டர்கள் பாடுபடுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வை விட்டு வெகுதூரம் சென்று விட்டார். எனவே அவரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பில்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.