ஒற்றை தலைமை என்ற சீர்திருத்தத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் உடன்பட வேண்டும்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற சீர்திருத்தத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் துணை நிற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற சீர்திருத்தத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் துணை நிற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
நம்பிக்கையை விதைத்தார்
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தவித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை விதைத்தார். எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி எந்த தேர்தலாக இருந்தாலும் களத்தில் முதல் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. தான் முதலில் வெளியிடும். அது தான் 90 சதவீத வெற்றியை உறுதி செய்தது. ஆனால் ஜெயலலிதாவிற்கு பிறகு கூட்டு தலைமையால் கடைசி நேரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிலைமை வந்து விட்டது.
வருகின்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் முடிவெடுத்துள்ளார்கள். தி.மு.க.வை எதிர்க்க ஒற்றை தலைமை வேண்டும். அந்த ஒற்றை தலைமைக்கு பொருத்தமானவர் எடப்பாடி பழனிசாமி. அவர் அரசியல், பொது வாழ்வில் ஒருநாளும் பின் வாங்கியது கிடையாது.
பராசக்தி வசனம்
தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்பது அ.தி.மு.க.வினர் ரத்தத்தில் ஊறியது ஆகும். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய ஓ.பன்னீர்செல்வம், கருணாநிதியின் பராசக்தி வசனத்தை தலைமாட்டில் வைத்து தூங்குவேன் என்று சட்டசபையில் கூறினார். ரவீந்திரநாத்குமார் எம்.பி., முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறார். இது அ.தி.மு.கவை சோர்வடைய செய்து உள்ளது.
ஒரு தாய் மக்கள்
ஓ.பன்னீர்செல்வம், தற்போது டி.டி.வி. தினகரனோடு ரகசிய உறவாடுகிறார். அ.தி.மு.க. தலைமை என்பது சந்தேகமற்ற அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும். தலைமை என்பது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். எங்களுக்கு சந்தேக தலைமை வேண்டாம். நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும். அதனால் தான் ஒற்றை தலைமை என்ற சீர்திருத்த பேச்சு வந்துள்ளது. கட்சி நலனை நினைத்து இருந்தால் ஓ.பன்னீர்செல்வம், எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருப்பார். ஒற்றைத்தலைமை என்ற நிர்வாக சீர்திருத்தம் ஏற்படுவது காலத்தின் கட்டாயம்.
அ.தி.மு.க. பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று இதுவரை காவல்துறையில் யாரும் கடிதம் கொடுத்ததில்லை. ஆனால் அந்த வரலாற்று பிழையை ஓ.பன்னீர்செல்வம் செய்து விட்டார். பொதுக்குழு என்பதே விவாதிக்க தான். அதில் தான் கருத்துக்களை பரிமாற முடியும். பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை குறித்து விவாதிப்பதில் எந்த தவறும் இல்லை. அ.தி.மு.க.வில் மதம், சாதி என்பதே கிடையாது. இங்கு எல்லோரும் ஒரு தாய் வயிற்று மக்கள். ஆனால் இந்த இயக்கத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். அது நடக்காது.
சீர்திருத்தம்
ஓ.பன்னீர்செல்வம் அனுதாபம் தேடுகிறேன் என்ற பெயரில் தொண்டர்களை கஷ்டப்படுத்தி பிளவுப்படுத்த வேண்டாம். அ.தி.மு.க. பொதுக்குழுவே உண்மையானது. எடப்பாடி தலைமை ஏற்க வேண்டும். அவர் ஓ.பன்னீர்செல்வத்தை தள்ளி வைத்து விட்டு இயக்கத்தை நடத்த நினைத்தது இல்லை. எனவே ஓ,பன்னீர்செல்வம் கட்சி சீர்திருத்தத்திற்கு உடன்பட வேண்டும். அதற்கு உடன்பட்டால் அவர் கட்சி தொண்டர்களின் மனதில் நிறைந்திருப்பார். நிலைத்திருப்பார். அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம்.
அ.தி.மு.க.வை எதிர்த்த எஸ்.டி.எஸ்., திருநாவுக்கரசு நிலை போல் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் வந்து விடுமோ என்று எனக்கு கவலையாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். டெல்லி சென்று விட்டு தற்போது மதுரைக்கு வரும் ஓ.பன்னீர்செல்வம், தொலைபேசியில் கட்சிக்காரர்களிடம் விலை பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.