ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பெரியகுளம்
அ.தி.மு.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந் தேதி சென்னையில் நடந்தது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. அதில் கடந்த மாதம் நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வெளியான இந்த தீர்ப்பு அவருடைய ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக நேற்று, தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தில் உள்ள எம்.பி. அலுவலகம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. நகர செயலாளர் அப்துல்சமது தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதற்கு பெரியகுளம் நகராட்சி அ.தி.மு.க. குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர்-இளம் பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.கள்ளிப்பட்டி சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி அன்பு, கீழவடகரை ஊராட்சி துணைத் தலைவர் ராஜசேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு இனிப்பு
இதேபோல் தேனி அல்லிநகரம் பஸ் நிறுத்தம், தேனி நேரு சிலை சிக்னல் ஆகிய இடங்களில் அல்லிநகரம் நகர செயலாளர் ரெங்கநாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
போடியில் அ.தி.மு.க. நகர செயலாளர்கள் பழனிராஜ், ஜெயராம பாண்டியன் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கம்பத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர்கள் ஆர்.ஆர்.ஜெகதீஸ் (வடக்கு), செந்தில்குமார் (தெற்கு), கம்பம் ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஆண்டிப்பட்டியில் பொதுக்குழு உறுப்பினர் சேட் அருணாச்சலம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.