மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு
x

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம் என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு இணங்க, மகளிர் முன்னேற்றம் மலரவும், பெண்ணடிமை தீரவும், பெண்ணுரிமை வாழவும் பாடுபடுகின்ற இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்குகிறது.

1972 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கழகத்தை துவக்கியபோது உருவாக்கப்பட்ட கொள்கை விளக்கத்திலேயே நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் குறைந்தது 25 விழுக்காடு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு அளிக்கவும், கொள்கை வகுக்கும் அமைப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கவும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் பங்கு பெறவும் வழிவகை செய்யப்பட்டது. மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதன் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, 31 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், அதாவது கிட்டத்தட்ட 15 விழுக்காடு பெண்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பொறுத்த வரையில், ஆரம்பத்திலிருந்தே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்து வருகிறது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதனை ஆதரித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இருப்பினும், இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு இந்தச் சட்டமுன்வடிவு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இந்தச் சூழ்நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் அலுவலாக நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது என்பதும், நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவினை நிறைவேற்றும் வகையில், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவினை நல்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா அவர்களின் கனவினை நிறைவேற்றவுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது பாராட்டினையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story