இரட்டை தலைமையில் விடாப்பிடியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விடாப்பிடியாக இருப்பதால், அவரை சமாதானப்படுத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைகின்றன.
சென்னை
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட அ.தி.மு.க.வில், இப்போது கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி நிர்வாகிகள் நடையாய் நடந்து சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகிறார்கள். ஒற்றை தலைமைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவபதி, மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் வி.சுனில் தனது ஆதரவாளர்களுடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
அதேவேளை ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலும் நிர்வாகிகள், தொண்டர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். 'இரட்டை தலைமை தொடர வேண்டும். ஒற்றை தலைமை என்றால், அது ஓ.பி.எஸ். ஆகதான் இருக்க வேண்டும்' என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள்.
சமரச முயற்சி தோல்வி
இந்தநிலையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செல்லூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், என்.ஆர்.சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மு.தம்பிதுரை எம்.பி. ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.
அதனைத்தொடர்ந்து செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தம்பிதுரை எம்.பி. ஆகியோர் நேராக ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி சென்றனர். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், எம்.எம்.பாபு ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. இதனால் சமாதானம் செய்ய வந்த நிர்வாகிகள் ஏமாற்றத்துடனேயே திரும்பி சென்றனர். இதனால் வழக்கம்போல நிர்வாகிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தது.
விடாப்பிடியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஒற்றை தலைமை கூடாது என்று ஒருபுறம் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திட்டவட்டமாக இருக்கிறார். இரட்டை தலைமையில் விடாப்பிடியாக இருக்கும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர் இந்த முறை எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார் என அவரது ஆதரவாளர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள்.
மேலும் ஒற்றை தலைமை கட்டாயம் என்ற நிலைமை வந்தால் அது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக இருக்கிறார்கள்.
இன்னொருபுறம் ஒற்றை தலைமை கட்டாயம் தேவை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொடிபிடித்து வருகிறார்கள். கட்சியின் இரு தலைவர்களும் எதிரெதிர் துருவங்களாக மாறியிருக்கும் இந்த சூழலில் திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
சுமுக முடிவு எட்டப்படுமா?
பொதுக்குழுவுக்கு முன்பாக சுமுக முடிவு எட்டப்படுமா? கட்சியில் நிலவும் பிரச்சினை ஓயுமா? என்ற கவலையில் அ.தி.மு.க. தொண்டர்களும், அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்குமோ? என்ற எதிர்பார்ப்பில் பிற அரசியல் கட்சியினரும் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வை உலுக்கி வரும் இந்த ஒற்றை தலைமை விவகாரம், அரசியல் களத்தையே மிகவும் பரபரப்பாக்கி இருக்கிறது. இதன் முடிவு என்னவாக இருக்க போகிறது? என்பதே நிலவும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
காலத்தின் கட்டாயம்
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், 'அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை அவசியம், இது காலத்தின் கட்டாயம், இன்றைய தேவை என்று தொண்டர்கள் விரும்புகிற ஒரு விருப்பத்தை பலதரப்பட்ட நிர்வாகிகளின் விருப்பத்தை மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரும்பான்மையோடு ஒற்றை தலைமை தேவை என்ற கருத்து விவாதிக்கப்பட்டது. நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதற்கான முடிவு தெரியவரும்' என்று தெரிவித்தார்.
1½ கோடி தொண்டர்கள்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான அ.தி.மு.க. வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,'அ.தி.மு.க. இளைஞர் அணியினர் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாக அ.தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் என்.ஆர்.சிவபதி கூறுகிறார். ஆனால், நாங்கள் எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருக்கிறோம். 1½ கோடி தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வருவார்கள்.
நீங்கள் திட்டமிட்டு, சர்வாதிகாரமாக கட்சியை அபகரிக்க முயற்சித்தால் தொண்டர்கள் மத்தியில் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.