ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை, ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஓ.பன்னீர்செல்வம்
சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தேனி மாவட்டத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். அதுபோல், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் பல்வேறு வாகனங்களில் தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் சென்றனர்.
இந்நிலையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் நேற்று குவிந்தனர். அங்கு அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதே போன்று அல்லிநகரம் பஸ் நிறுத்தம் அருகில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கம்பம் சிக்னல் பகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, இடைக்கால பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.